Tuesday, March 17, 2015

நேந்திரங்காய் சிப்ஸ் - Plantain Chips


நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை நேந்திரங்காய் சிப்ஸ் (ஆ)சாமி யாராவது மலையாளக் கரையோரத்திலிருந்து ஊர் திரும்பும்போது வாங்கிவந்தால்தான் உண்டு.

அப்பாவிற்கு திருச்சிக்கு வேலை இடமாற்றம் வந்தபோது அரசு ஹவுசிங் போர்டில் வீடு கிடைக்கும் வரை திருச்சி உறையூரில் உய்யகொண்டான் வாய்க்கால் அருகில் ஒரு வீட்டில் சில மாதங்கள் இருக்க வேண்டியிருந்தது. அருகில் வாழைத்தோப்பு, அங்கு வேலை செய்து திரும்பும் ஆட்கள் தார்தாராக வாழைக்காய், நேந்திரங்காய் எடுத்துவருவர். ஒரு சீப்பு ஒரு ரூவாய். அப்ப பக்கத்து வீட்டம்மா எங்கம்மாவிற்கு நேந்திரங்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்.

என் டூட்டி நேந்திரங்காயின் தோல் உரிப்பதுதான், கையில் விளக்கெண்ணெய் தடவிக்கொண்டு - கைவிரல் கருத்துப்போகாமலிருக்க‌ - லேசாக காயில் கத்தியால் ஒரு கீறுகீறி கட்டைவிரலால் தோலை செதுக்கி எடுக்க வேண்டும், நகத்தால் எடுத்தால் நகத்துள்ளே தோல் ஏறிவிடும். அன்றிலிருந்து மலையாளக் கரையோரத்திலிருந்த நேந்திரங்காய் சிப்ஸ் காவேரிக்கரைக்குத் தாவிவிட்டது. வீட்டுக்கு வந்துட்டு போறவங்களுக்கெல்லாம் பாக்கெட் போட்டுக் கொடுப்போம்.

சில வருடங்களுக்கு முன்னால் அப்பா-அம்மா அமெரிக்கா வந்தபோது சீப்புசீப்பாக நேந்திரங்காய் Costcoவில் பார்த்தார்கள், அவ்வளவுதான் மலையாள-காவேரிக்கரை நேந்திரங்காய் சிப்ஸ் இப்போ ஹட்சன் நதிக்கரையில்.
தேவையானவை:

1. நேந்திரங்காய்
2. தேங்காய் எண்ணெய் / Vegetable oil
3. சிப்ஸ் சீவற கட்டை
4. மஞ்சள் தூள்
5. உப்பு
6. ஒரு டம்ளர் தண்ணீர்

செய்முறை:
முதலில் நேந்திரங்காயை கத்தியால் தோலை சிறிதாக கீறி கையால் உரித்து காய் கருத்து போகாமல் இருக்க தண்ணீரில் போடவும்.

வாணலில் எண்ணெய் ஊற்றி நன்றாக அடுப்பில் சூடாக்கிக் கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பும், 2 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலக்கி வைத்துக்கொள்ளவும்.

கொதிக்கின்ற வாணலில் சிப்ஸ் சீவற கட்டையை கொஞ்சம் மேலாகப்பிடித்தவாறு நேந்திரங்காயை செத்தவும்.

 பிறகு அதில் 2 ஸ்பூன் மஞ்சள்-உப்பு கலந்த நீரை ஊற்றவும், இப்போது எண்ணெய் நன்றாகப் பொங்கி வரும், ஓரளவு எண்ணெய் பொங்குவது அடங்கியவுடன்  சிப்ஸை எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுக்கவும், 

அவ்வளவுதான்  நேந்திரங்காய் சிப்ஸ் ரெடி.












No comments:

Post a Comment